ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

 திருமண வயதை உயர்த்தக்  கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

திருமண வயதை ஆணுக்கும், பெண்ணுக்கும் உயர்த்தக் கோரித தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்

News image
Updated On :6 நவம்பர் 2014, 3:27 pm

நாகராஜன்

திருமண வயதை ஆணுக்கும், பெண்ணுக்கும் உயர்த்தக் கோரித தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இது தொடர்பாக மதுரையில் உள்ள பொதுநல வழக்குகளுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: கடந்த சில ஆண்டுகளாக கலப்புத் திருமணம் தொடர்பான வன்முறைகள் பல அதிகரித்துள்ளன.

 அவ்வாறு காதல் கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளை அவர்களது பெற்றோர்கள் கெüரவக் கொலை செய்கின்றனர். இது தவிர, அது போன்ற  திருமணங்களின் அவமானத்தால் பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

  இதன் மூலம் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கும், சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கும் அரசு தவறிவிட்டது. காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர். அதன் பிறகு இருவருக்குள்ளும் மனக் கசப்புகள் ஏற்பட்டு விவாகரத்துக் கோரி நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.

 இந்து மத திருமணச் சட்டத்தில் மணப் பெண்ணுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு வாழக்கை நடத்துவதற்கான போதிய பக்குவத்தன்மை இல்லால் தோல்வியில் முடிகின்றன.

 எனவே, திருமணம் செய்வதற்கு தகுதியான வயதாக மணமகளுக்கு 21 எனவும், மணமகனுக்கு 25 எனவும் நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

 மேலும், கோவில்களில் திருமணம் செய்வதற்கு முன்பு பெற்றோர்களின் சம்மதம் பெற இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

 இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வியாழக்கிழமை (நவ.6) விசாரணைக்கு வந்தது.

  மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். மேலும், இதே போன்ற ஒரு வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு பரிசீலனையை அனுப்பியுள்ளது. அதனால், இந்த பொதுநல மனுவை ஊக்குவிக்க விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.